𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Tamil

SLIM DIGIS 2.1 விழாவில் அதிக விருதுகளைப் பெற்ற தொலைத்தொடர்பு வர்த்தகநாமமாக HUTCH

கடந்த ஜனவரி 25ஆம் திகதி இடம்பெற்ற SLIM DIGIS 2.1 வருடாந்த விருது வழங்கும் விழாவில், இலங்கையின் கையடக்கத் தொலைபேசி தொடர்பாடல் சேவைகளில் வேகமாக வளர்ந்து வரும் HUTCH வலையமைப்பானது, 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல விருது உள்ளிட்ட மூன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிநவீன மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனராக அதன் புதுப்பிக்கப்பட்ட கவனம் முதல் தொலைத்தொடர்பு துறையில் புதுமைகள் வரை, Hutch வலையமைப்பை தொலைத்தொடர்பு துறையில் டிஜிட்டல் புத்தாக்கத்தின் முன்னணியில் நிலைநிறுத்திய அதன் புத்தாக்கம் மிக்க 360 பாகை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரசாரங்களுக்காக இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்விருதுகள் குறித்து Hutch வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா கருத்துத் தெரிவிக்கையில், “SLIM DIGIS 2.1 இல் இந்த மதிப்புமிக்க விருதுகளை வென்றதையிட்டு நாம் பெருமையடைகிறோம். இலங்கையில் எமது வர்த்தக நாமத்தையும் எமது நடவடிக்கைகளையும் உயர்வடையச் செய்த, எமது உயர்தர டிஜிட்டல் பிரசாரங்கள் அடைந்த உண்மையான சாதனை இதுவாகும். அர்ப்பணிப்பு மிக்க எமது Hutch குழு மற்றும் எமது உறுதியான கூட்டாளரான டிஜிட்டல் முகவர் ‘Digibrush’ ஆகியோரின் பங்களிப்பின்றி இவ்விருதுகளை நாம் அடைந்திருக்க முடியாது. இந்த விலைமதிப்பற்ற மைல்கல்லை அடைவதற்கான வெற்றி தொடர்பில் நான் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன்.” என்றார்.

Hutch வலையமைப்பு அடைந்ள்ள இவ்விருதுகள், தொலைத்தொடர்புத் துறையில் இரண்டு பிரிவுகளின் கீழ் அதன் “Unlimited YouTube” பொதி மற்றும் “100% Anytime Data” பொதி ஆகிய பிரசாரங்களுக்காக முறையே வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தொழில்துறை பிரிவுகளிலுமான செயல்திறன் சந்தைப்படுத்தல் விருதான “Cross Specialty Award” பிரிவில் Hutch வெள்ளி விருதை வென்றது. விளம்பர முதலீடுகளின் மூலம் வருமானம் மற்றும் வருமானத்தை ஈட்டுவதற்கு சந்தைப்படுத்தல் நிதி எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை மதிப்பிடுவதன் அடிப்படையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

Digibrush நிறுவனத்தின் இணை நிறுவுனரான ஹிஷாம் சுல்பிகார் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “Hutch நிறுவனத்துடனான எமது சிறப்பான கூட்டாண்மை தொடர்பில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்த பெறுமதி மிக்க விருதுகளுடன் நாம் தற்போது கொண்டாடும் வெற்றியானது, Hutch இன் வளர்ச்சி, புதுமை, ஆக்கப்பூர்வமான துணிச்சல், உற்சாகமான மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டின் விளைவாகும். Hutch உடனான எமது ஒத்துழைப்பு தொடர்ந்தும் மிக பிரகாசமாக அமையும்.” என்றார்.

இந்த விருதுகள், Hutch ஆனது அதன் வாடிக்கையாளர்களின் தகவல்தொடர்பாடலில் புத்தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டுமென அது கொண்டுள்ள கவனத்திற்கான ஒரு சான்றாகும். கொவிட்-19 தொற்று பரவல் முழுவதும், Hutch அதன் பெரும்பாலான தகவல்தொடர்பாடல் சேவைகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கு அமைவாக மாற்றியமைத்தது. அத்துடன் அது தற்போது SLIM DIGIS 2.1 இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, சமீபத்திய டிஜிட்டல் உட்கட்டமைப்பை செயற்படுத்தியுள்ளதன் மூலம், அது தனது பிரசாரங்கள் அனைத்தும் அதிக பயனர்களை சென்றடைவதை உறுதிசெய்ய டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முயற்சிகளை பரந்த அளவில் பயன்படுத்தியுள்ளது. ஒரு செயற்றிறன் சார்ந்த நிறுவனமாக Hutch நிறுவனம் காணப்படுவதால், அதன் சந்தைப்படுத்தல் முயற்சிகளை அதே அணுகுமுறையுடன் மேற்கொள்கிறது. இதுவே, அனைத்துத் தொழில்துறையாளர்கள் பிரிவில் அது வெள்ளி விருதைப் பெற காரணமாக அமைந்தது. SLIM DIGIS 2.1 ஆனது சர்வதேச மற்றும் உள்நாட்டு வர்த்தகநாமங்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச முகவர்கள் உள்ளிட்ட 140 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றும் ஒரு விருது நிகழ்வாக இருக்கும் நிலையில், Hutch அனைத்து தொழில்துறை பிரிவில் வெள்ளி விருதை அடைந்தது மிகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

SLIM DIGIS 2.1 ஆனது, இலங்கையின் சந்தைப்படுத்தலுக்கான தேசிய அமைப்பான Sri Lanka Institute of Marketing (SLIM) (இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம்) இனால் நடாத்தப்பட்டது. இது டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் புத்தாக்கங்களை கௌரவிக்கின்ற, புரட்சியை ஏற்படுத்தும் டிஜிட்டல் தீர்வுகளை அடையாளம் கண்டு, சந்தைப்படுத்தலில் இணக்கத்தை மேம்படுத்துகின்ற மிகவும் பெருமைக்குரிய விருது நிகழ்வாகும். . SLIM DIGIS ஆனது, வங்கி மற்றும் நிதி, காப்புறுதி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், இணையம், பொழுதுபொக்கு மற்றும் விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து சிறந்த டிஜிட்டல் பிரசாரங்களுக்கு கௌரவமளிக்கிறது.